search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை விமான நிலையம்"

    மதுரை விமான நிலையத்தில் பெண்ணிடம் ரூ. 4 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. #goldseized

    அவனியாபுரம்:

    மதுரை விமான நிலைம் மூலம் வெளிநாட்டில் இருந்து தங்கம், விலை உயர்ந்த பொருட்கள், போன்றவை கடத்தி கொண்டு வருவது அடிக்கடி நடந்து வருகிறது.

    சில நாட்களுக்கு முன்பு இரண்டு பேர் ஆசன வாயிலில் வைத்து கடத்தி வந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    கடத்தல் அதிகரித்துள்ளதையடுத்து மதுரை விமான நிலையத்தில் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இலங்கையில் இருந்து மதுரை வரும் ஸ்ரீரங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவர் தங்கம் கடத்துவதாக சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு உதவி கமி‌ஷனர் வெங்கடேஷ்பாபுவுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து நேற்று இரவு மதுரை வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது தஞ்சாவூரைச் சேர்ந்த அமிதாபீவி என்பவர் சோதனைக்கு ஒத்துழைக்காமல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து பெண் அதிகாரிகள் அமிதாபீவியை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். அப்போது அவர் உள்ளாடைக்குள் 120 கிராம் தங்கச் செயினை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 3 லட்சத்து 80 ஆயிரத்து 500 ஆகும்.

    அதிகாரிகள் கடத்தல் நகையை பறிமுதல் செய்து அமிதாபீவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டக்கோரி ரெயில் மறியலுக்கு முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். #MaduraiAirport
    மதுரை:

    மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்று தேவரின் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்காக பல போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

    தேவரின தேச பக்த முன்னணி மற்றும் பாரதிய பார்வர்டு பிளாக் கட்சியினர் இதே கோரிக்கையை வலியுறுத்தி ரெயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

    அதன்படி பல்வேறு தேவரின அமைப்புகளைச் சேர்ந்த மூர்த்தி, ஸ்ரீதர் வாண்டையார், கதிரவன், திருமாறன், முருகன் தலைமையில் 150-க்கும் மேற்பட்டோர் இன்று மதுரை ரெயில் நிலையம் முன்பு திரண்டனர்.

    அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், தேவரின அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து மறியலுக்கு முயன்ற 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
    மதுரை விமான நிலையத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷாவை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார். #BJP #Amitshah #ADMK #OPS
    அவனியாபுரம்:

    மதுரையில் இன்று நடைபெற்ற பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா பங்கேற்றார்.

    பின்னர் அவர் ராமநாதபுரத்தில் நடைபெறும் பா.ஜ.க. கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையத்திற்கு பிற்பகல் 1 மணியளவில் வந்தார்.

    அப்போது உசிலம்பட்டியில் இன்று மாலை நடைபெறும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அங்கு வந்திருந்தார். அமித்ஷா வருவதை அறிந்த ஓ.பன்னீர்செல்வம் சிறிது நேரம் காத்திருந்து சந்தித்து பேசினார்.



    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் எந்தெந்த தொகுதிகள் என இதுவரை தெரியவில்லை.

    பா.ஜ.க.வுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளை ஒதுக்குமாறு ஓ.பன்னீர்செல்வத்திடம், அமித்ஷா கூறியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. #BJP #Amitshah #ADMK #OPS
    விமானம் மூலமாக சிங்கப்பூருக்கு வெளிநாட்டு கரன்சியை கடத்திய தூத்துக்குடி வாலிபரை போலீசார் கைது செய்தனர். #MaduraiAirport
    அவனியாபுரம்:

    மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவை உள்ளது. அண்மைக்காலமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கும், இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் தங்கம், கரன்சி உள்ளிட்டவை கடத்தப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது.

    இதை தடுக்க விமான நிலைய போலீசார் மற்றும் சுங்க இலாகவினர் தீவிர சோதனை செய்த பிறகே பயணிகள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுகின்றனர்.

    மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் புறப்பட தயாரானது. பயணம் செய்யும் பயணிகளின் உடமைகளை மத்திய சுங்க இலாகா நுண்ணறிவு உதவி ஆணையர் வெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர்.

    சிங்கப்பூர் செல்ல இருந்த தூத்துக்குடி மாவட்டம், நாராயணன் தெருவைச் சேர்ந்த பார்வதிநாதன் (வயது 46) என்பவரின் பையும் சோதனை செய்யப்பட்டது.

    அந்த பையில் யூரோ, சிங்கப்பூர் டாலர், புருனே, மலேசியா நாட்டு கரன்சிகள் கட்டுக்கட்டாக இருந்தன. இதன் இந்திய மதிப்பு ரூ.44 லட்சம் ஆகும்.

    இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் பார்வதிநாதனை பிடித்து பெருங்குடி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்வதிநாதனை கைது செய்தனர். #MaduraiAirport
    5 மாநில சட்டசபை தேர்தலில் மோடியா, ராகுலா என்று நடந்த பலப்பரீட்சையில் மோடி வீழ்த்தப்பட்டு இருக்கிறார் என்று திருமாவளவன் கூறினார். #Thirumavalavan #Modi #Election2018
    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான பொதுத்தேர்தலின் முடிவுகள் மூலம் மக்கள் பாஜகவிற்கு எதிராக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

    பா.ஜ.க. கைகளில் நீண்ட காலமாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களையும் பாஜக பறிகொடுத்து இருக்கிறது.

    தனது ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துபல முயற்சிகளை மேற்கொண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. மோடியா ராகுலா என்று நடந்த இந்த பலப்பரீட்சையில் ராகுல் வெற்றி பெற்றிருக்கிறார். மோடி வீழ்த்தப்பட்டு இருக்கிறார்.

    2019-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் சனாதன சக்திகளை விரட்டி அடிப்பதற்கு பொது மக்கள் ஓரணியில் திரண்டு வருகிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

    ஏனென்றால் பாரதிய ஜனதாவுக்கு வலுவான செல்வாக்கு உள்ள மாநிலங்களில் மக்கள் இந்த தீர்ப்பை எழுதி இருக்கிறார்கள்.

    இதையொட்டி அவர்கள் மதத்தின் பெயரால் சனா தனத்தின் பெயரால் வன்முறைகளைத் தூண்டி விடுவதற்கான வாய்ப்பு உள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்று முளைக்க தொடங்கி இருப்பது தேர்தல் ஆதாயத்திற்காக தான் தென்னிந்தியாவிலும் வன்முறைகளை கட்ட விழ்த்து விட அவர்கள் திட்டமிட்டு உள்ளார்கள்.

    இந்துக்கள், இந்துக்கள் அல்லாதவர்களுக்கு இடையேயான வன்முறை வெறியாட்டத்தின் மூலம் தான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்று ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார அமைப்புகள் நம்புகின்றனர்.

    இதை எப்பாடு பட்டாலும் முறியடித்துவிட வேண்டுமென்று ஜனநாயக சக்திகள் சிந்திக்க தொடங்கி இருக்கிறார்கள்.



    ராகுல்காந்தி தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட மதசார்பற்ற ஜனநாயக கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்வது வரலாற்றின் தேவையாக மாறி இருக்கிறது. அதற்கான வாய்ப்பை இத்தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ளன.

    தற்போது பா.ஜ.க. கூட்டணியில் இருந்து சிவசேனாவும் விலகி இருக்கிறது. தேசிய ஜனநாயக முன்னணி பலவீனமடைந்து வருகிறது .

    பாரதிய ஜனதா கட்சி பலவீனமடைந்து வருகிறது. சனாதான கட்சிகளும் பலவீனமடைந்து வருகிறார்கள். இன்னும் அவர்களை முற்றிலுமாக பலவீனப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியை எச்.ராஜா தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அண்மையில் திருமாவளவன் தொட்ட கட்சியை மக்கள் தொட மாட்டார்கள் என்று கூறுகிறார்.

    தீண்டாமை என்பது அதில் இருந்துதான் வருகிறது. ஆகவே சாதி புத்தி என்பது சனாதன புத்தி என்பது எச் ராஜாவை ஆட்டிப்படைக்கிறது என்பது வெளிப்படுத்தும் வகையில் தான் அவர் கூறியிருக்கும் கருத்து உள்ளது.

    அவர் மீது தமிழக அரசு உடனடியாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவரை அந்த சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

    ரஜினிகாந்த் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள். தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க பலம் உடைய கட்சியாக இருக்கிறது என ரஜினி நம்பினார். தேர்தலுக்கு பின்பு பா.ஜ.க பலம் இல்லாத கட்சி என்று ரஜினி உணர்ந்து இருக்கிறார். அதையே ரஜினி கூறியுள்ள கருத்து வரவேற்கத்தக்கது.

    மேற்கண்டவாறு திருமாவளவன் கூறினார். #Thirumavalavan #Modi #BJP #Election2018
    துபாயில் இருந்து மதுரை வந்த விமானத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான ஒன்றரை கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #MaduraiAirport
    அவனியாபுரம்:

    மதுரை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து விமானம் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவும் துபாய் விமானம் மதுரை வந்தது.

    அந்த விமானத்தில் தங்கக்கட்டிகள் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய நுண்ணறிவு பிரிவு சிறப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத்தொடர்ந்து விமானத்தில் வந்த 120 பயனாளிகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.


    அப்போது 2 பயணிகள் சூட்கேஸ்களில் தங்க கட்டிகள் கடத்தி வருவது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 2 பேரும் சூட்கேஸ்களுடன் பெருங்குடி போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.

    போலீசார் சூட்கேசில் இருந்த தங்க கட்டிகளை கைப்பற்றியபோது ஒன்றரை கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.

    இது குறித்து பிடிபட்ட 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? யாருக்காக கடத்தி வந்தனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #MaduraiAirport #GoldSmuggling
    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஊழலால் கலைக்கப்பட்டது திமுக ஆட்சி தான் என்றும், அவர்களிடமே ஊழல் குறித்த கேள்விகள் கேட்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். #TNCM #EdappadiPalaniswami #DMK #Stalin
    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் குறித்த நிருபர்களின் கேள்விக்கு அதனை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

    மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த முயற்சித்து வருவதாகவும், பெட்ரோல் மற்றும் டீசல் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மத்திய அரசுதான் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.



    திமுக தலைவர் ஸ்டாலினின் ஊழல் குற்றச்சாட்டு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ஊழலினால் கலைக்கப்பட்ட ஆட்சி திமுகவுடையது என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்றும், ஊழல் குறித்த கேள்வியை அங்கேதான் கேட்க வேண்டும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #TNCM #EdappadiPalaniswami #DMK #Stalin
    காவல் துறையை கண்டித்து கருணாஸ் பேசியது கோழைத்தனம் என்று மதுரை விமான நிலையத்தில் நடிகர் கார்த்திக் கூறினார். #Karunas #Karthik
    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் நடிகர் கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது:-

    2½ ஆண்டுகளாக அரசியலில் இருந்து விலகி இருந்தேன். அதற்கு காரணம் இருக்கிறது. ஆனால் அப்படி ஒதுங்கி இருந்திருக்கக்கூடாது.

    நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பகுதி நேர அரசியல்வாதிகளாக இல்லாமல் முழுநேர அரசியல் வாதிகளாக செயல்பட வேண்டும். இனி நானும் முழுநேர அரசியல்வாதியாக செயல்படுவேன்.

    எனது கட்சியில் தவறு செய்தவர்கள் அவர்களாகவே ஒதுங்கிக் கொள்ள வேண்டும். இல்லை எனில் நான் விலக்க நேரிடும்.

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம். அதே சமயத்தில் திருவாரூர் தொகுதி மிகப்பெரிய தலைவர் போட்டியிட்ட இடம் என்பதால் அதில் போட்டியிடவில்லை. பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிடுவோம்.

    மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயரை சூட்ட வேண்டும். ஆளும் கட்சி மக்களுக்கு எதிராக இருந்தால் அதற்கு எனது ஆதரவில்லை.


    தமிழர்களுக்கு வீரம் அதிகம். போராடலாம். ஆனால் கொலை செய்யக் கூடாது. காவல்துறையை கண்டித்து கொலை செய்வோம் என கருணாஸ் என்ன காரணத்துக்காக கூறினார் என்று தெரியவில்லை. அவர் அவ்வாறு பேசியது கண்டித்தக்கது. இது மிகவும் கோழைத்தனமான செயலாகும்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #Karunas #Karthik
    அமைதி பேரணி முடிந்த நிலையில் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு எடுப்பேன் என மு.க.அழகிரி கூறினார். #DMK #MKAlagiri
    அவனியாபுரம்:

    சென்னையில் இருந்து விமானம் மூலம் மு.க. அழகிரி இன்று காலை மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலையை மதுரையில் அமைக்க வேண்டும் என மனு கொடுக்கப்பட்டுள்ளது. அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள ஆவின் பால் பண்ணை சாலை சந்திப்பில் அவரது சிலை வைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்துள்ளோம். சிலை விவரம் குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும்.


    அமைதி பேரணி தற்போது தான் நடந்து முடிந்துள்ளது. எனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு எடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKAlagiri #KarunanidhiStatue
    மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டுடன் வந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் குடியேற்றப்பிரிவு துறையில் இன்ஸ்பெக்டர் விக்டர் பணியில் இருந்தார். அப்போது இலங்கை விமானத்துக்கான பயணிகளின் விவரம் சரிபார்க்கப்பட்டது. இதில் பயணி ஒருவர் குறித்த விவரம் தவறாக இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவரிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் அவரின் பெயர் வீரகுமார் (24), ஆர்.எம்.எஸ்.காலனி, கருமண்டபம், திருச்சி என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் பெருங்குடி போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    போலீசாரின் விசாரணையில், வீரகுமாரின் ஆதார் கார்டு போலி என்பதும், இன்னொருவரின் பாஸ்போர்ட்டில் பயணம் செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து மதுரை விமான நிலைய அதிகாரி விக்டர் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவசக்தி வழக்குப்பதிவு செய்து வீரகுமாரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
    தற்காலிகமாக நிறுத்தப்படவிருக்கும், மதுரையில் இருந்து சென்னை வழியாக மும்பைக்கு மேற்கொள்ளப்பட்ட ஏர் இந்தியா விமான சேவை 20 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.#ponradhakrishnan
    சென்னை:

    தற்காலிகமாக நிறுத்தப்படவிருக்கும், மதுரையில் இருந்து சென்னை வழியாக மும்பைக்கு மேற்கொள்ளப்பட்ட ஏர் இந்தியா விமான சேவை 20 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.

    மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 42 ஆண்டுகளாக ஏர் இந்தியா நிறுவனம், மதுரையில் இருந்து சென்னை வழியாக மும்பைக்கு செல்லும் விமான சேவையை நடத்தி வருகிறது. 80 சதவீதம் பயணிகள் பயணிக்கும் இந்த விமான சேவை, எவ்வித காரணமும் அறிவிக்கப்படாமல் 12-ந் தேதி(நாளை) முதல் நிறுத்தப்பட உள்ளதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனின் கவனத்திற்கு வந்தது.

    அதைத்தொடர்ந்து, மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை நடைபெற்று வருவதையும், ரூ.1,500 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் மதுரையில் அமைக்க இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரை மற்றும் ராமேசுவர சுற்றுலா தலங்கள் ஆகியவற்றை மேற்கோள் காட்டி மத்திய விமானப் போக்குவரத்துத்துறை மந்திரி சுரேஷ் பிரபு, அதன் இணை மந்திரி ஜெயந்த் சின்ஹா, ஏர் இந்தியா தலைவர் மற்றும் இயக்குனர் பிரதீப் சிங் கரோலா ஆகியோருக்கு பொன்.ராதாகிருஷ்ணன் தனித்தனியாக கடிதம் எழுதி மதுரையில் இருந்து சென்னை வழியாக மும்பைக்கு இயக்கப்பட்டு வந்த விமான சேவையை நிறுத்தாமல் தொடர வலியுறுத்தினார்.



    மேலும், பொன்.ராதாகிருஷ்ணன் தனது தனிச் செயலாளரிடம் நேரடியாக சென்று விமானத்துறை அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிய அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில், விமானப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள், ஹஜ் புனித பயணம் நடைபெற்று வருவதால் இந்த விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியதின் பேரில் 20 நாட்களுக்கு பின் மீண்டும் ஏர் இந்தியா நிறுவனம் மதுரையில் இருந்து சென்னை வழியாக மும்பைக்கு செல்லும் விமான சேவை இயக்கப்படும் என்பதையும், விரைவில் மும்பையில் இருந்து மதுரைக்கு நேரடி ஏர் இந்தியா விமான சேவை தொடங்குவது குறித்து பரிசீலிப்பதாகவும் உறுதி அளித்து உள்ளனர்.

    இதனால் விமானம் மூலம் சுற்றுலா, வியாபார வர்த்தகம், மருத்துவ சிகிச்சைக்காக பயணிப்போரின் பயணம் எந்த தடையுமின்றி 20 நாட்களுக்கு பிறகு தொடரும் என்றும், அதே போல பரிசீலனையில் உள்ள மும்பையில் இருந்து மதுரைக்கு நேரடி ஏர் இந்தியா விமான சேவையும் விரைவில் தொடங்கும் என்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ponradhakrishnan
    அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழகத்தில் பாரதிய ஜனதா கால் ஊன்ற முடியாது என்று மதுரை விமான நிலையத்தில் திருநாவுக்கரசர் கூறினார்.
    அவனியாபுரம்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    லோக் ஆயுக்தா சட்டம் தமிழக சட்டமன்றத்தில் அவசரமாக கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்து யாரிடமும் ஆலோசனை கேட்கவில்லை. அவசர கோலத்தில் கொண்டு வந்துள்ளனர்.

    எந்த வகையான விதிகளோடு வைக்கப்பட்டு ஒரே நாளில் கொண்டு வரப்பட்டது என்பது தெரியவில்லை. அதனால் தி.மு.க., காங்கிரஸ் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தோம். லோக் ஆயுக்தா விசயத்தில் புதிய மாற்றங்கள், திருத்தங்கள் செய்து அமல்படுத்த வேண்டும்.

    அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழகத்தில் பா.ஜனதா கால் ஊன்ற முடியாது. தமிழக மக்கள் பா.ஜனதாவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.


    ஓ.பன்னீர்செல்வம் மீதான வழக்கின் தீர்ப்பு விரைவில் வர உள்ளது. அதே போல் 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் 2 நீதிபதிகளின் தீர்ப்பு மாறுபட்டு வந்துள்ளது. பின் 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட்டு தீர்ப்பு வர உள்ளது.

    எனவே நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தமிழகத்தில் ஒரே நேரத்தில் தேர்தல் வரலாம். ஆனால் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் என்பது பண மதிப்பீடு போல் ஒரே இரவில் அறிவிக்க முடியாது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் தேசிய கட்சிகளுடனும்-மாநில கட்சிகளுடனும் பேசி முடிவு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் அண்ணாநகரில் நடந்தது. இதில் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பி.ஜே.காமராஜ், செய்யதுபாபு, ராஜாஹசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    வாக்காளர்களை சந்தித்து கட்சியை பலப்படுத்துவது, தேர்தலின்போது எப்படி செயல்படுவது? உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. #Congress #Thirunavukkarasar #BJP #Amitshah
    ×